Bell’s palsy எனும் முகவாதத்திற்கு, தேர்ந்த பிசியோதெரபி மருத்துவர்களின் உதவி, இயல்பு நிலைக்கு விரைந்து திரும்ப உதவும்…
முன் பனி காலமான மார்கழி தை மாதங்களில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் சிலருக்கு முக வாதம்(Bell’s Palsy) வருவதுண்டு. முகவாதம் ஏற்படும் போது, முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்து விடுகிறது. உடனடி மருத்துவ சிகிச்சைக்கு பின் அதன் தாக்கத்திலிருந்து விடுபட பிசியோதெரபி மருத்துவம் அவசியமாகிறது.
இதனால் ஏற்ப்படும் பாதிப்புகள்
- முகத்தின் ஒரு பக்கம் சரிந்துவிடுவது ,
- கண் இமை மூட முடியாமல் போவது,
- தண்ணீர் குடிக்கும் போது நீர் உதட்டோரம் கசிவது,
- புன்னகைக்கும் போது முகம் ஒரு பக்கமாக கோணுவது
- தெளிவாக பேச/உச்சரிக்க இயலாது போவது போன்றவை ஏற்படலாம்.
- வெளி தோற்றம் சார்ந்து இருப்பதால் இது சிலரது மன வலிமையையும் தன்னம்பிக்கையையும் குறைத்துவிடுகிறது.
பாதிக்க பட்டவர்களில் 70% பேர் எந்த ஒரு வைத்தியமும் இன்றி குணமடைந்து விட வாய்ப்புள்ளது. எனினும் குணமாவதை உறுதி செய்யவும், அதற்க்கு தேவைப்படும் கால அவகாசத்தை குறைக்கவும் பிசியோதெரபி உதவுகிறது.
அளவிடும் முறைகள் :
ஒருவரின் முகவாத பாதிப்பை அளவிடவும், எந்த தசையில் பாதிப்பு அதிகம் என்றும் பிரிக்க இப்போது அளவுகோல்கள் உள்ளன.(உதாரணம்:Sunnybrook Facial Grading system). இவை பாதிக்கப்பட்டவருக்கு பயிற்சிகளின் முக்கியத்தை உணர்த்தவும், பின்னாளில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை கணிக்கவும் உதவுகின்றன.
பிசியோதெரபி மருத்துவ முறைகள்
பிசியோதெரபி மருத்துவர்கள்,
- காதோரம் சிலருக்கு ஏற்படும் வலி குறைக்க ஒத்தட முறைகள்
- வலுவிழந்த தசைகளை வலுபடுத்த பயிற்சிகள்,
- மசாஜ்,
- (electrical stimulation) மின்னியல் சிகிச்சை,
- biofeedback என்று அழைக்கப்படும் “கண்ணாடியின் உதவியோடு செய்யும் பயிற்சிகள்” பரவலாக செய்து வந்தனர்.
ஆய்வாளர்கள் இன்று மின்னியல் சிகிச்சையினால் synkinesis வர வாய்ப்புள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர் ் (synkinesis-“சிரிக்கும் போது கண் மூடிக்கொள்ளும் நிலை”) எனவே பயிற்சி சிகிச்சைகளே சிறந்தது என்றும், பதிவு செய்துள்ளார்கள்.
பயிற்சி சிகிச்சை வகைகள்
Retraining: தசைகளின் வலு மிக குறைவாக உள்ள நிலையில்/காலத்தில் வலுவிழந்த தசைகளை வலுபடுத்துவதோடு வலுவான தசைகளை தளர்த்தும் முறைகளையும் கற்றுத்தருதல் அவசியமாகிறது. இதை “retraining” என்பர்.
தவறான பயிற்சிகள், பாதிக்கப்படாத தசைகளை மேலும் வலுபடுத்தி வலுவிழந்த தசைகள் பங்கேற்கும் வாய்ப்பை குறைத்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது முகம் சம நிலையில் இல்லாமல் போக வழி செய்துவிடும்.
Biofeedback; கண்ணாடியின் முன்னின்று பயிற்சி மருத்துவர் செய்து காட்டும் அசைவுகளை செய்யக்கற்று கொண்டு, பின் தானே வீட்டில் செய்து தவறுகளை உதவியின்றி திருத்திக்கொள்ள biofeedback உதவுகிறது.
இமைக்க: கண்களை மூட இயலாத நாட்களில் விரலால் மூட கற்றுகொடுக்கும் பயிற்சி மருத்துவர்கள் .பின்னாளில் தன்னிச்சையாக மூடவும், இரு கண்களையும் சேர்த்தும் தனி தனியாகவும் மூடி திறக்க பயிற்சிகள் கொடுப்பார்கள்.
கடைசியாக கண்ணில் தூசி விழுவதை தவிர்க்கும் வண்ணம் இமை வேகமாக செயல்படவும் பயிற்றுவர்.
கசிவை குறைக்க: காற்று மற்றும் தண்ணீரை வாயினுள் அடைத்து வெளியேறாது தடுக்க உதடுகளை இறுக்கும் பயிற்சிகள் பல உண்டு. இத்தகைய பயிற்சிகளை தசைகளின் அன்றைய திறனுக்கேற்ப குறைக்கவும், கடினமாக்கவும் இயலும். இவை உதட்டோரம் நீர் கசிவதை குறைக்கும்.
உச்சரிப்பை மேம்படுத்த: “பள்ளி” போன்ற வார்த்தைகளை நாம் உச்சரிக்கும்போது அதிக காற்றழுத்தத்தை வாயினுள் வைத்து சொல்கிறோம். “பாவனை” போன்ற வார்த்தைக்கு உள்ளழுத்தம் குறைவு. ஆனால் இவை இரண்டுக்கும் உதடுகள் மூடிய நிலை தேவை.
“சுள்ளி” எனும் வார்த்தைக்கு உதடுகளை மூடும் அவசியம் இல்லை ஆனால் குவிக்க வேண்டியுள்ளது. “வள்ளி” என்று சொல்ல கீழ் உதட்டை மட்டும் வளைக்க வேண்டியுள்ளது. “இல்லை” என்று சொல்ல கீழே விரிந்த உதடு, “இமை” எனும் போது மேலுதடோடு சென்று மூடவும் வேண்டும்.
எந்த வார்த்தைகளை வெளி கொண்டு வருவது கடினமாக உள்ளது என்பதை பிசியோதெரபி மருத்துவரிடம் பகிர்ந்து, அதற்கேற்ற பயிற்சிகளை செய்தல் வேண்டும.்
பாவனைகளை சமன் செய்ய : Mime தெரபி எனும் பயிற்சி முறை முகத்தின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து, முக பாவனைகளை சமன் செய்ய பயன்படுத்தபடுகின்றன.
தேவைக்கேற்ற பயிற்சிகள்: தசைகள் வலுவடைந்து வரும் காலகட்டத்தில், அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு ஏற்றவாறு பயிற்சிகள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
உதாரணமாக பணிக்கு செல்லும் பெண்ணுக்கு உதட்டுச்சாயம் பூசிக்கொள்ள உதடுகளை ஒன்றோடு ஒன்று உராய வைப்பது தேவை, ஆனால் ஒரு ஆணுக்கு முக சவரம் செய்ய இயலும் வண்ணம் உதடுகளை வளைத்தல் தேவை.
கவுன்செலிங் :மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவரின் சந்தேகங்கள் மற்றும் பயத்தை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் வண்ணம் தகுந்த ஆலோசனைகள் தருவர். அது ஒருவருக்கு தன்னம்பிக்கையை கொடுத்து விரைவில் குணமடைய வழி வகுக்கும். குணமாகாத வெகு சிலருக்கு அது அவர்கள் திரும்பி சமூகத்தை சந்திக்கும் மனோபலத்தையும் கொடுக்கும்.
முகவாத பிசியோதெரபி சிகிச்சை தனித்துவம் வாய்ந்தது, அதை செய்ய நன்கு தேர்ந்த பயிச்சியாளர்களை தேர்ந்தெடுங்கள்.
Image courtesy:
http://drgaglioti.com http://health.sunnybrook.ca/wellness/exercise-physiotherapy-weakness-bell-palsy/
https://www.pinterest.com/explore/facial-nerve/?lp=true